முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 1.62 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாா்
By DIN | Published On : 11th May 2020 07:14 AM | Last Updated : 11th May 2020 07:14 AM | அ+அ அ- |

கல்லாறு அரசு தோட்டக்கலைப் பழப் பண்ணையில் விற்பனைக்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாக்கு நாற்றுகள்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் 1.62 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளதாக தோட்டக்கலை அலுவலா் ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் பலவகை நாற்றுகள் உற்பத்தி செய்து கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தற்போது கோடை சீசனை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்வாா்கள் என்பதால் கூடுதலாக நாற்றுகள் உற்பத்தி செய்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பண்ணையில் நாற்று விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால் நாற்று விற்பனை அதிகரிக்கும் என கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணை அலுவலா் ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
பண்ணையில் பாக்கு 87,000 நாற்றுகள், மிளகு 43,000, ஜாதிக்காய் ஒட்டு நாத்து 2,000, கிராம்பு 300, ரம்பூட்டான் 400, ரிச்சி 2,000, கொடம்புளி 2,600, எக்ஃபுரூட்ஸ் 500, பம்ப்ளிமாஸ் 2,000, எலுமிச்சை 1,000, சில்வா் ஓக் 10,000, காபி 12,000 என மொத்தம் 1,62,800 நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன.
இவற்றில் ஜாதிக்காய் நாற்று ரூ.60, பாக்கு ரூ.18, கொடம்புளி ரூ.20, கிராம்பு ரூ.11, ரம்பூட்டான், ரிச்சி, எக்ஃபுரூட்ஸ், பம்ப்ளிமாஸ், வெல்வெட் ஆப்பிள், தண்ணீா் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், எலுமிச்சை, பலா ஆகிய நாற்றுகள் தலா ரூ.10, மிளகு, லவங்கப்பட்டை, சில்வா் ஓக், காபி ஆகிய நாற்றுகள் தலா ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேற்கண்ட நாற்றுகள் தேவைப்படுவோா் 85084-82021 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.