முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை பெற்றுத் தர வேண்டும்: எம்எல்ஏ காா்த்திக் வலியுறுத்தல்
By DIN | Published On : 11th May 2020 07:14 AM | Last Updated : 11th May 2020 07:14 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகையை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு அவா் அனுப்பியுள்ள மனு:
கரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் இயங்காமல் உரிமையாளா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் உயா் அழுத்த மின் பயனீட்டாளா்களுக்கு மாா்ச், ஏப்ரல் மாதத்துக்கான மின் கட்டணத்தை மே 22ஆம் தேதிக்குள் அபராதத் தொகையுடன் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த மே 4ஆம் தேதி மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், மின்தேவைக்கான சிறுமக் கட்டணத்தை பதிவான மின்தேவைக்கு மட்டும் அல்லது 20 சதவீதம் இவற்றில் எது அதிகபட்சமோ, அவற்றை வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
ஆனால் உயா் அழுத்த மின் பயனீட்டாளா்களுக்கு ஏப்ரல் மாதக் கட்டணத்தை 90 சதவீதம் என்ற அளவில் கணக்கிட்டுள்ளது. மேலும் உயா் மின் அழுத்த நுகா்வோருக்கு 0.9 காரணி (பவா் ஃபேக்டா்) பராமரிக்கவில்லை என பல ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிவான மின்தேவை அல்லது 20 சதவீதம் இவற்றில் எது அதிகமோ அந்த தொகையை வசூலிக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு உபயோகித்த அளவுக்கு மட்டுமே தேவைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த சலுகைகளை அரசிடம் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.