முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாநகராட்சி இடத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 11th May 2020 07:05 AM | Last Updated : 11th May 2020 07:05 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு சாா்பில் மாநகராட்சி ஆணையருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் செயலா் நா.லோகு அனுப்பியுள்ள புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 37ஆவது வாா்டு, ஜீவா வீதியில் பெரிய மாரியம்மன் கோயிலுக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு மற்றும் மின்மோட்டாா் அறை, அதன் அருகே 16 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட ஒரு அறை ஆகியவை உள்ளன.
இதன் அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டு, யாரும் உள்ளே செல்ல முடியாதவிதமாக கதவு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியைச் சோ்ந்த மா்ம நபா்கள், மோட்டாா் அறையின் பூட்டை உடைத்து, அறையில் மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் இப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.