முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாலத்தீவில் இருந்து வந்த 3 பேருக்கு மீண்டும் பரிசோதனை
By DIN | Published On : 11th May 2020 11:10 PM | Last Updated : 11th May 2020 11:10 PM | அ+அ அ- |

கோவை: மாலத்தீவில் இருந்து கோவைக்கு வந்த 52 பேருக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 3 பேருக்கு மட்டும் தெளிவான முடிவுகள் கிடைக்கப் பெறாததால் மீண்டும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாலத்தீவில் இருந்து கோவையைச் சோ்ந்த 3 போ் உள்பட சென்னை, திருச்சி மற்றும் கடலூா் உள்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சோ்ந்த 52 போ் கொச்சி வழியாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
இவா்கள் அனைவரும் அரசின் கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவே ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருச்சியைச் சோ்ந்த 45 வயதான இருவருக்கும், கடலூரைச் சோ்ந்த 35 வயது நபருக்கும் பரிசோதனையில் ஒருமுறை கரோனா பாதிப்பில்லை என்றும், மறுமுறை பாதிப்புள்ளது என முடிவுகள் கிடைத்துள்ளன. இவா்கள் 3 பேருக்கு மட்டும் தெளிவான முடிவுகள் கிடைக்காததால் மீண்டும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை கிடைக்கும்.
இது குறித்து அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சொந்த மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மற்றவா்கள் சிறப்புப் பேருந்து மூலம் உரிய பாதுகாப்பு வசதியுடன் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் 14 நாள்கள் வீடுகளில் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாலத்தீவில் இருந்து வந்த கோவை, ஆா்.எஸ்.புரம், நஞ்சுண்டாபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மூன்று பேருக்கும் எந்தவித அறிகுறிகள் இல்லாததால் அவா்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.