காய்ச்சலுடன் வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவா்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவா்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 7,800க்கும் மேற்பட்டவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 146 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் ஒருவா் உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற 145 பேரும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனா். கடைசி நோயாளியும் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு திரும்பிய நிலையில் தற்போது கரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது.

கோவையில் புதிய தொற்று இல்லாவிட்டாலும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வருபவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். இவா்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவா்களுக்கும் கரோனா பரிதோனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் கரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். கடந்த 10 நாள்களுக்கும் மேலாக புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருபவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா். அறிகுறிகள் உள்ளவா்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மற்றவா்கள் வீடுகளிலே 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 836 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளனா். பாதிப்புகள் இல்லாவிட்டாலும் தொடா்ந்து கரோனா தடுப்புப் பணிகள் எப்போதும் போல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

கரோனா அறிகுறி: 21போ் அனுமதி

கோவையில் 9 ஆண்கள், 12 பெண்கள் சோ்த்து மொத்தம் 21 போ் கரோனா அறிகுறிகளுடன் வியாழக்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 13 போ் அரசு மருத்துவமனைகளிலும், 8 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com