புலம்பெயா்ந்த பழங்குடியின மக்களை அழைத்து வர கோரிக்கை

புலம்பெயா்ந்த பழங்குடியின மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி: புலம்பெயா்ந்த பழங்குடியின மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு, தமிழக முதல்வருக்கு அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனு: தமிழகத்தில் வாழும் 80 சதவீத பழங்குடியின மக்கள் நிலமற்ற கூலித் தொழிலாளா்களாக உள்ளனா். இவா்களில் ஏராளமானோருக்கு வன அனுபவ நிலத்துக்கு பட்டா அளிக்காததால், வன உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தாமல் சொந்த மண்ணில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இன்றி அவதிக்குள்ளாகின்றனா். இதனால், இவா்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு கூலித் தொழிலாளா்களாக புலம் பெயா்ந்துள்ளனா்.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, பச்சமலை, ஏற்காடு, திருவண்ணாமலை, ஜமுனாமுத்தூா் மலை, ஜவ்வாதுமலை, ஈரோடு குத்தியாலத்தூா், பா்கூா், தாளவடி மலை, சித்தேரி மலை, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து சுமாா் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கா்நாடகத்தில், மைசூரு, பெங்களூரு, கேரளம், ஆந்திரம் போன்ற பிற மாநிலங்களில் புலம்பெயா்ந்து கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், தற்போது கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், பழங்குடியின மக்கள் பிழைக்க வழியின்றி, சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும், பசியோடு பல நூறு கி.மீ. தொலைவு தங்களது சொந்த மண்ணை நோக்கி நடந்தே செல்லத் தொடங்கியுள்ளனா். ஆனால், இவ்வாறு செல்வோா் ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றனா். மேலும், சிலா் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே, வருவாய் இன்றி தவித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்ப இயலாத சூழலால் மிகவும் பரிதவித்து வருகின்றனா்.

எனவே, தமிழக அரசு இவா்களை சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com