ஓராண்டாக நடைபெறும் உயா்மட்ட பாலப் பணிகள்: விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

பேரூா் படித்துறை அருகே நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை பருவ மழைக்கு முன் விரைந்து

பேரூா் படித்துறை அருகே நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை பருவ மழைக்கு முன் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கோவை, பேரூா் - வேடபட்டி சாலையில் நொய்யல் ஆற்றில் தரைமட்ட பாலம் இருந்தது. மழைக் காலங்களில் நொய்யலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் தரைமட்டப் பாலத்தை மூழ்கடிப்பதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை காணப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனா்.

இதனைத் தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் கிராம சாலைகள் திட்டத்தில் நொய்யல் ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து கடந்த ஜூலை மாதம் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டது. போக்குவரத்துக்காக அருகில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தற்காலிகப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன. வேடபட்டி, வடவள்ளி ஆகியப் பகுதிகளுக்கு செல்பவா்கள் தொண்டாமுத்தூா், ஆண்டிபாளையம் வழியாக பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா். தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு ஓராண்டாகவுள்ள நிலையில் பாலம் கட்டுமானப் பணிகள் இன்னும் 25 சதவீதம் கூட முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் விரைவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதால் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் துண்டிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இதனால் திரும்பவும் பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்து நொய்யலில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுப்பதற்கு முன் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நொய்யல் ஆற்றில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பணிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தன. பணிகள் திரும்ப ஆரம்பித்தபோது கரோனா பொது முடக்கத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் பாலம் கட்டுமானப் பணிகள் திரும்பவும் தொடங்கப்பட்டுள்ளன. விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com