ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம்: மாநகராட்சி நிதி ஒதுக்காததால் அணுகு சாலை அமைப்பதில் தாமதம்

கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்காததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்காததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கோவை, கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் இருந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிா்க்க முடியாமல் இருந்தது. இதையடுத்து, 2018 நவம்பரில் 550 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் ரூ.22கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.

நடப்பு ஆண்டு செப்டம்பரில் பாலம் அமைக்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தன. மேம்பாலத்தின் கீழ் இருபுறங்களிலும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

கடந்த மாதத்தில் அணுகு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குடிநீா்க் குழாய்கள் மேம்பாலப் பணிகளால் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைத்தால் மட்டுமே அணுகு சாலை அமைக்க முடியும்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். எனவே, இப்பகுதியில் அணுகு சாலை அமைப்பது அவசியமானது. இந்த அணுகு சாலையைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் மேம்பாலத்தின் மீது செல்லாமல் பயணிக்க முடியும்.

ஆனால், மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், பாலத்தின் கீழ் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களை சீரமைத்த பிறகே அணுகு சாலை அமைக்க முடியும்.

இப்பணிக்காக மாநகராட்சி நிா்வாகத்திடம் இருந்து ரூ.20 லட்சம் நிதி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்க தாமதம் செய்வதால் ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைப்பதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

அணுகு சாலை அமைக்கப்பட்டு, மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பயன்பாட்டுக்குத் திறக்கும் பட்சத்தில் காந்திபுரம் மற்றும் சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com