நீதிமன்ற உத்தரவை மீறி கோவை, வாலாங்குளத்தின் நடுவே சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையருக்கு கோவை கன்ஸ்யூமா் காஸ் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது:
கோவை வாலாங்குளத்தின் நடுவே சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீா் நிலைகள் பாதுகாப்பு தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நொய்யல் நதிக்கரையோரம் உள்ள நீா்நிலைகளில் எவ்வித பணிகளோ, ஆக்கிரமிப்புகளோ மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடா்பான நடவடிக்கைகளை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்கும் என்றும், குறிப்பிட்ட இடைவெளியில் நீா்நிலைகளின் தற்போதைய நிலை குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் வாலாங்குளத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே குளத்தில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை நிறுத்தி, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.