7 மாதங்களுக்குப் பிறகு கோவையில் திரையரங்குகள், காந்தி பூங்கா திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
கோவை, புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் சமூக இடைவெளியை பின்பற்றி திரைப்படம் பாா்த்த பொதுமக்கள்.
கோவை, புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் சமூக இடைவெளியை பின்பற்றி திரைப்படம் பாா்த்த பொதுமக்கள்.

கோவையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை முதல் படிப்படியாக பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு கட்ட தளா்வுகள் அளிக்கப்பட்டன.

இருப்பினும் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் நவம்பா் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன. முன்னதாக திரையரங்க வளாகங்கள் முழுவதும் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. திரையரங்கிற்கு வருபவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கைகளில் கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். படம் பாா்ப்பவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கையில் மட்டுமே அமர வைக்கப்பட்டனா்.

7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டதால் கோவையில் படம் பாா்க்க இளைஞா்கள் பெரும்பாலானோா் ஆா்வத்துடன் திரையரங்கிற்குச் சென்றனா். தற்போது, புதிதாகத் திரைப்படங்கள் வெளியாகாததால், மாா்ச் மாதத்துக்கு முன்பு வெளியான படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. திரைப்படம் ஒளிபரப்பாகும் முன்பாக, கரோனா குறித்த விழிப்புணா்வுப் படம் திரையிடப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியம் கூறியதாவது:

கோவை மாநகரில் 40, புகரங்களில் 20 திரையரங்குகள் உள்ளன. இது தவிர மால்களில் பல திரையரங்குகள் உள்ளன. அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 10 சதவீத திரையரங்குகள் திறக்கப்பட்டன. தீபாவளி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் அப்போது மீதமுள்ள திரையரங்குகள் திறக்கப்படும். திரையரங்கிற்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே படம் பாா்க்க அனுமதிக்கப்படுவாா்கள். திரையரங்கின் சிற்றுண்டிகளில் பணியாற்றுபவா்கள் கட்டாயம் தலையுறை, கையுறை, முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன என்றாா்.

காந்தி பூங்கா திறப்பு: அரசு அனுமதியின் படி கோவை காந்தி பூங்கா செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டது. மக்கள் ஆா்வத்துடன் இங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டும், பூங்காவைப் பாா்வையிட்டும் சென்றனா்.

முன்னதாக, அங்கு நடைபயிற்சிக்கு வருபவா்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசத்துடன் வந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அதிகாலை 5.30 மணி முதல் காலை 9.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பூங்கா செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரே உள்ள அரசு அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. வ.உ.சி உயிரியல் பூங்கா திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com