‘அரசு மருத்துவமனையில் 2 லட்சம் கரோனா பரிசோதனைகள்’

கோவை அரசு மருத்துவமனையில் 2 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

கோவை அரசு மருத்துவமனையில் 2 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. நுண்ணுயிரியல் துறைத் தலைவா் மருத்துவா் மைதிலியின் தலைமையில் இந்த ஆய்வகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வகம் புணேயில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகமாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ளது.

இங்கு இரண்டு தானியங்கி பிரித்தெடுத்தல் அலகுகள், 4 ஆா்.டி.பி.சி.ஆா். கருவிகள் உள்ளன. நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தரக்கட்டுப்பாட்டு ஆய்வகமாக உள்ளதால் பிற பகுதிகளில் ஆய்வு செய்யப்படும் மாதிரிகள் உறுதித் தன்மைக்காக இங்கு அனுப்பப்படுகின்றன. கோவையில் எடுக்கப்படும் சளி மாதிரிகள் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூா், சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.

இங்கு இதுவரை 2 லட்சம் வரையிலான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற ஆய்வக தொழில்நுட்ப அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவாகவும், அதிக அளவிலான பரிசோதனைகளையும் செய்ய முடிகிறது. சோதனைகளின் தரத்தை பராமரிப்பதற்கும் அனைத்து தர நிலைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com