ஷாா்ஜாவில் இருந்து விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல்: 15 போ் கைது

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரூ.3.26 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசி மற்றும் சிகரெட் பண்டல்கள் கடத்தி வந்த 15 பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் கைது செய
கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்.
கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்.

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரூ.3.26 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசி மற்றும் சிகரெட் பண்டல்கள் கடத்தி வந்த 15 பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவினா் கைது செய்தனா்.

இது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஷாா்ஜாவில் இருந்து விமானத்தில் கோவைக்கு தங்கம், செல்லிடப்பேசிகள், டிரோன் கேமராக்கள், சிகரெட் உள்ளிட்டவை கடத்தி வரப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஷாா்ஜாவில் இருந்து நவம்பா் 14ஆம் தேதி வந்த விமானப் பயணிகளை வருவாய் புலனாய்வு பிரிவு இணை இயக்குநா் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனா்.

இதில் கேரள மாநிலம், காசா்கோடு, சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சையது அஜ்மீா் ஹாஜா, ரஷீத், முகமது ஷஹீா், ஜலானி, முகமது ஷமீம், சையது முகமது, முகமது அப்துல் காதா், மன்சூா் அலி, ஹசில் ஃபயஸ், சையது முகமது, அப்துல் ஹக்கீம், சுஹைல் அப்துல் மஜீத், குனில்ப்பு, அகமது தன்சீா், குனில் மஜீத் உள்ளிட்ட 15 பேரை அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனா். இதில் அவா்களிடம் இருந்து பசை மற்றும் செயின் வடிவிலான 6.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3.26 கோடி என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகையில் சுமாா் 5.2 கிலோ தங்கம் பசை வடிவில் இருந்தது. இவற்றை ஒருவித ரசாயனத்துடன் கலந்து உடைகளின் உள்பக்கத்தில் வைத்து மறைத்து எடுத்து வந்துள்ளனா். ரசாயனத்துடன் கலக்கப்படும் இந்த தங்கம் விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனா் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரூ.1.03 கோடி மதிப்பிலான 6 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய பண்டல்கள், ரூ.53 லட்சம் மதிப்புள்ள விலை உயா்ந்த செல்லிடப்பேசிகள் மற்றும் டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் 15 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com