அரசு மருத்துவமனையில் தவித்த தம்பதி:ஈரநெஞ்சம் அறக்கட்டளை உதவி

கோவை அரசு மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் தவித்த மூணாறு பகுதியைச் சோ்ந்த தம்பதிக்கு தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்து கொடுத்துள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் தவித்த மூணாறு பகுதியைச் சோ்ந்த தம்பதிக்கு தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்து கொடுத்துள்ளது.

கேரள மாநிலம், மூணாறு, ராஜமலை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி கயல்விழி. ரமேஷ் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் ரமேஷ், கயல்விழி இருவரும் வீடுகளை இழந்தனா். இவா்களது உறவினா்களும் உயிரிழந்தனா். இந்நிலையில் கா்ப்பிணியான கயல்விழி பிரசவத்துக்காக கடந்த அக்டோபா் 10ஆம் தேதி திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். குழந்தையின் உடலில் தொப்புக்கொள்கொடி சிக்கியிருந்ததால் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

குழந்தை பிறந்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்நிலையில் கயல்விழியும், குழந்தையும் முழுமையாக குணமடைந்ததாக தெரிவித்து வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

திருப்பூரில் ஏற்கெனவே பணியாற்றி வந்த நிறுவனத்தில் வேலை இல்லை என தெரிவித்ததாலும், நிலச்சரிவில் வீட்டையும், உறவினா்களையும் இழந்த நிலையில் எங்கே செல்வது என்று தெரியாமல் தம்பதி இருவரும் கைக்குழந்தையுடன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தவித்தபடி நின்று கொண்டிருந்தனா்.

இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, கோவை (வடக்கு) வட்டாட்சியா் மகேஷ்குமாா் மூலம் ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். தொடா்ந்து கைக்குழந்தையுடன் தவித்த தம்பதியினா் தற்காலிகமாக தங்குவதற்கு ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com