பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை:கோவை அரசு மருத்துவமனைக்கு முதல் பரிசு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் இருந்து பரிசு பெறும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவா் வி.பூமா.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் இருந்து பரிசு பெறும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவா் வி.பூமா.

கோவை: பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாநில அளவில் அதிக அளவிலான குழந்தைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததன் அடிப்படையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் மாநில பச்சிளம் குழந்தைகள் ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகள் அடிப்படையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு (2019 -20) அதிக அளவிலான குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் தரம், குழந்தைகளின் மறு வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசு சென்னை ஒருங்கிணைந்த மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையத்துக்கும், மூன்றாம் பரிசு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பரிசுகளை வழங்கினாா்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவின் தலைவா் வி.பூமா கூறியதாவது:

கோவை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள், பிறவி குறைபாடுள்ள குழந்தைகள், நோய்த் தொற்றுள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமில்லாம்ல மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் இருந்தும் பரிந்துரைக்கப்படுகின்றனா்.

சராசரியாக தினமும் 10 குழந்தைகள் வரையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனா். கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 807 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 1 முதல் 1.5 கிலோ எடையுள்ள குழந்தைகள் 95 சதவீதமும், 1 கிலோவுக்கு கீழுள்ள குழந்தைகளில் 85 சதவீதம் வரையில் காப்பாற்றப்படுகின்றனா். குழந்தைகள் அனுமதி, சிகிச்சை, விரைந்து குணமடைதல், குணமடையும் குழந்தைகளின் சதவீதம் ஆகியவற்றின் கீழ் சிறப்பான செயல்பாட்டை கருத்தில் கொண்டு முதல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com