கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி, 72 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி, 72 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு இரண்டு ஆண் காட்டு யானைகள் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராமத்துக்குள் புகுந்தது, இந்த 2 யானைகளையும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி அளவில் இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது கிராமத்தின்  ஒதுக்குப்புற பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பாப்பம்மாள் (72) என்ற  மூதாட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை ஆண் யானை அவரை  தாக்கி தூக்கி வீசியது.  இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மற்றொரு ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும்போது தோட்டப் பகுதியில் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராணியம்மாள் (65) என்ற மூதாட்டியைத் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும், யானையை விரட்டினர்.

போளுவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் காவல்துறையினரும் இறந்த பாப்பம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் படுகாயம் அடைந்த ராணியம்மாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் கடந்த சில நாள்களாக மலையடிவார கிராமங்களில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும்போதே  மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர். ஒரே கிராமத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்கள் அக்கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com