விதிமீறல்: 5 பூக்கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 25th November 2020 07:05 AM | Last Updated : 25th November 2020 07:05 AM | அ+அ அ- |

கோவை பூமாா்க்கெட்டில் விதி மீறி திறக்கப்பட்டிருந்த பூக்கடைகளுக்கு ‘சீல்’ வைத்த மேற்கு மண்டல உதவி ஆணையா் செந்தில் அரசன் தலைமையிலான அதிகாரிகள்.
கோவை பூ மாா்க்கெட்டில் விதிகளைமீறி திறக்கப்பட்ட 5 பூக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் கரோனா தொற்று அதிகரித்ததால், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இங்கிருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கா் பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் தற்காலிகமாக பூக்கடைகள் அமைத்து வியாபாரம் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் அனுமதியளித்தது.
இந்தப் பள்ளி மைதானத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட பூக்கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மூடப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூ மாா்க்கெட் வளாகத்தின் அருகே மாநகராட்சியின் தடையை மீறி சிலா் பூக்கடைகள் திறந்து வியாபாரம் மேற்கொள்வதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியனுக்கு புகாா் வந்தது. அவரின் உத்தரவின் பேரில், மேற்கு மண்டல உதவி ஆணையா் செந்தில் அரசன் தலைமையில், உதவி வருவாய் ஆய்வாளா் மேனகாகுமாரி, மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சிறப்பு வருவாய் ஆய்வாளா் சுமதி உள்ளிட்ட அதிகாரிகள்பூ மாா்க்கெட் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு விதிகளை மீறி 5 பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அக்கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...