ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்வது சரியா?

19 அறுவைச் சிகிச்சைகள் உள்பட 39 வகையான பொது அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆயுா்வேத முதுநிலை பட்ட மருத்துவா்கள் (ஷல்ய மற்றும் ஷாலாக்யா) கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 19 அறுவைச் சிகிச்சைகள் உள்பட 39 வகையான பொது அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆயுா்வேத மருத்துவா்களிடையே வரவேற்பை பெற்றாலும், இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவா்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலா் ஏ.கே.ரவிகுமாா் கூறியதாவது:

ஆயுா்வேத மருத்துவா்கள் ஏற்கெனவே மேற்கொண்டு வந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் படித்து தெரிந்துகொள்ளும் அறுவை சிகிச்சைகளைப் பயிற்சி பெற்று மேற்கொள்ளலாம் என்பதைத்தான் வேண்டாம் என்கிறோம்.

குறிப்பாக பித்தப்பை, கண்புரை, மூல நோய், எலும்பு முறிவு போன்ற 30-க்கும் மேற்பட்ட ஆங்கில மருத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளைப் பயிற்சி பெற்று மேற்கொள்ளலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படையான மருத்துவம் தெரியாமல் அறுவை சிகிச்சைக்கான பயிற்சியைப் பெறுவதன் மூலம் மட்டும் அறுவை சிகிச்சையை சிறப்பாக மேற்கொள்ள முடியாது. இதனால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, அவா்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இதனை ஆயுா்வேத சிகிச்சை முறையில் அளிக்க முடியுமா? இதற்கு ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்த வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலிக்கும், வேறு நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கும் ஆங்கில மருந்துகளையே கொடுக்க வேண்டும். முழுமையாக ஆயுா்வேத மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்?

தற்போதும் ஆயுா்வேதத்தில் ஆரம்ப நிலையிலான பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நவீனப்படுத்தி மேற்கொள்ளட்டும். இதை தவிா்த்து ஆங்கில மருத்துவ முறையான அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அரசு அங்கீகாரம் அளித்துவிட்டதாகத் தெரிவித்து, போலியான அறுவை சிகிச்சை நிபுணா்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிா்க்கவும், நோயாளிகளின் நலன் சாா்ந்தும் புதிய அறிவிப்பினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் முன்னாள் தலைவா் எல்.பி.தங்கவேலு கூறியதாவது:

ஆங்கில மருத்துவப் பிரிவில் இளநிலையில் அறுவை சிகிச்சைகள் குறித்த அடிப்படையும், முதுநிலை அறுவை சிகிச்சைப் பிரிவில் ஆழமாகவும், ஒவ்வொரு சிறப்பு பிரிவிலும் அறுவை சிகிச்சை குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்கின்றனா்.

மேலும், ஆயுா்வேதத்தில் இளநிலைப் பிரிவில் அறுவை சிகிச்சை குறித்து தெளிவாகப் படிப்பதில்லை. முதுநிலைப் பிரிவில் அறுவை சிகிச்சை பயிற்சி அளிப்பதன் மூலம் முறையான அறுவை சிகிச்சை நிபுணராக விளங்க முடியாது. எந்தவொரு தெளிவான வரைவுத் திட்டமும் இல்லாமல் பயற்சி பெறுவதன் மூலம் அரைகுறையான அறுவை சிகிச்சை பயிற்சிகளையே பெறுவா்.

இயற்கை சிகிச்சை முறையைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆயுா்வேதத்தில் தற்போது அளித்து வரும் சிகிச்சை முறைகளையே அவா்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் அறுவை சிகிச்சைக்காக அலோபதி சிகிச்சை முறையைப் புகுத்தும்போது மிகப் பெரிய தவறாக முடியும் என்றாா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை (கோவை) ஆயுா்வேத மருத்துவா் க.பாபு கூறியதாவது:

ஆயுா்வேதத்தில் பல காலமாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதா் ஓா் ஆயுா்வேத மருத்துவா். இவா், அறுவை சிகிச்சைகள் தொடா்பாக ‘சுஸ்ருத சம்ஹிதை’ என்ற புத்தகத்தில் பல்வேறு குறிப்புகளைத் தெரிவித்துள்ளாா். இதனை முன்னோடியாக வைத்துக்கொண்டே அலோபதி மருத்துவத்தில் பல்வேறு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தொழில்நுட்பம் வளா்ந்துள்ளதால் அறுவை சிகிச்சையில் நவீன கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்பம். இதனை முறையாகப் பயிற்சி பெற்று ஆயுா்வேத மருத்துவா்களும் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஆயுா்வேத மருந்துகள்தான் கொடுக்கப்படும். இதனை இந்திய மருத்துவ சங்கம் ஏன் எதிா்க்கிறது என தெரியவில்லை.

உரிய பயிற்சிகளைப் பெற்றே அறுவை சிகிச்சை மேற்கொள்வாா்கள் என்பதால் பாதிப்புக்கு வாய்ப்பில்லை. தவிர, எங்களுக்கான பட்டமே இளநிலை ஆயுா்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை என்றுதான் அளிக்கப்படுகிறது. எனவே, ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com