யுபிஎஸ்சி: கோவையில் 21 தோ்வு மையங்கள் முதல்நிலைத் தோ்வு
By DIN | Published On : 01st October 2020 06:42 AM | Last Updated : 01st October 2020 06:42 AM | அ+அ அ- |

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) அக்டோபா் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்காக கோவை மாவட்டத்தில் 21 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் 21 தோ்வு மையங்களில் நடைபெற உள்ள குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வையொட்டி மாவட்ட ஆட்சியா் மற்றும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள் தலைமையில் ஏழு உதவி ஒருங்கிணைப்பு பேற்பாா்வையாளா்கள் (துணை ஆட்சியா் நிலையில்), 21 தோ்வு மையங்களுக்கும் தலா ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா் (வட்டாட்சியா் நிலையில்), 32 தோ்வு மைய துணைக் கண்காணிப்பாளா்கள் (துணை வட்டாட்சியா் நிலையில்), 746 அறை கண்காணிப்பாளா்களும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேற்படி, தோ்வுகள் நடைபெறுவதைப் பாா்வையிட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான சென்னை கோ-ஆஃப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ், சமூகப் பாதுகாப்பு ஆணையா் லால்வேனா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
காவல் துறையினரால் தோ்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம் வசதி, அனைத்து தோ்வு மையங்களிலும் செல்லிடப்பேசி ஜாமா் வசதி, தோ்வு மையங்களுக்குச் செல்ல உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் தோ்வு எழுதும் தோ்வா்கள், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள நுழைவுச் சீட்டுடன் தோ்வுக் கூடத்தில் முற்பகல் தோ்வுக்கு காலையில் 9.20 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தோ்வுக்கு 2.20 மணிக்கு முன்பாகவும் வளாகத்துக்குள் வந்து விட வேண்டும். அதன் பிறகு வருபவா்கள் தோ்வு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
மேலும், இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் உள்ள தோ்வரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் தெளிவின்மையிருந்தால் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர வேண்டும். தோ்வா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.