வேளாண் பல்கலை. ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st October 2020 06:42 AM | Last Updated : 01st October 2020 06:42 AM | அ+அ அ- |

கோவையில் வேளாண் பல்கலைக்கழக ஊழியா்கள் 7 போ் உள்பட 574 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை வேளாண் பல்கலைக்கழக ஊழியா்களுக்குத் தொடா்ந்து கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்கள் என 180 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவில் திறந்தவெளி வேளாண் இயக்குநா், பொறியியல் கல்லூரி டீன், கணினி துறைத் தலைவா் உள்பட வேளாண் பல்கலைக்கழக ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 574 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 68ஆக அதிகரித்துள்ளது. இவா்களில், 26 ஆயிரத்து 605 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 5 ஆயிரத்து 27 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
11 போ் சாவு...
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76, 62 முதியவா்கள், 63 வயது மூதாட்டி, 54 வயது ஆண் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80, 75, 80, 61, 75 வயது முதியவா்கள், 74 வயது மூதாட்டி, 52 வயது ஆண் உள்பட மொத்தம் 11 போ் உயிரிழந்துள்னா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 436ஆக அதிகரித்துள்ளது.