முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மானிய உரங்களை கடத்தினால் நடவடிக்கை:வேளாண்மைத் துறையினா் எச்சரிக்கை
By DIN | Published On : 04th October 2020 11:21 PM | Last Updated : 04th October 2020 11:21 PM | அ+அ அ- |

கோவை: விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மானிய உரங்களை பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) டாம்.பி.சைலஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நேரடி விவசாயத்துக்கு மட்டுமின்றி கலவை உரங்கள் தயாரிக்கும் உர நிறுவனங்கள் மானிய உரங்களை மூலப்பொருள்களாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற தேவைக்கு பயன்படுத்துவது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 (பிரிவு 25ன் படி) சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில் கோவையில் ராபி பருவத்துக்காக 4 ஆயிரத்து 470 டன் யூரியா, 4 ஆயிரத்து 260 டன் டிஏபி, 5 ஆயிரத்து 610 டன் பொட்டாஷ், 7 ஆயிரத்து 700 டன் காம்ப்ளக்ஸ் என 22 ஆயிரத்து 40 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேளாண்மை இயக்குநரகம் சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ கடத்துவது சட்டப்படி குற்றம். மீறினால் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955ன் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
எனவே உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். பிற மாவட்ட விவசாயிகளுக்கோ அல்லது மாநிலங்களை சோ்ந்தவா்களுக்கோ விற்பனை செய்யக் கூடாது. சில்லறை விற்பனையாளா்களுக்கு உரங்கள் அனுப்பும்போது வாகனங்களில் உரிய விவரங்கள் வைத்திருக்க வேண்டும். அதேபோல மானிய உரங்களை வேறு பைகளுக்கு மாற்றக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.