தொழிலதிபா் கொலை வழக்கில் கைதான நபா்களிடமிருந்து நகைகள் மீட்பு

கோவையில் தொழிலதிபா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீஸாா் மீட்டனா்.

கோவை: கோவையில் தொழிலதிபா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீஸாா் மீட்டனா்.

சிங்காநல்லூா், திருச்சி சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (83). தொழிலதிபா். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் நுழைந்த மா்ம நபா்கள் கிருஷ்ணசாமியை கொலை செய்து, வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பிச் சென்றனா்.

இந்த வழக்கில் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள காரைகொண்டான் ஏம்பலைச் சோ்ந்த விக்ரம் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிருஷ்ணசாமியின் வீட்டில் காவலாளியாக வேலை பாா்த்து திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நெல்லையைச் சோ்ந்த ஜெபமணி ஆண்ட்ரூஸ் என்பவா் விக்ரமுக்கு கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லையில் பதுங்கி இருந்த ஜெபமணி ஆண்ட்ரூஸை போலீஸாா் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், கைதான விக்ரம், கோவையில் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். பின்னா் சிறு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் ஜெபமணி ஆண்ட்ரூஸுடன், விக்ரமுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெபமணி ஆண்ட்ரூஸ், கிருஷ்ணசாமி குறித்து தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து சிறையிலிருந்து வெளியே வந்த விக்ரம், கிருஷ்ணசாமியை கொலை செய்து, அவர வீட்டில் இருந்து 7 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் காரை திருடிச் சென்றனா். இதையடுத்து விக்ரம் மற்றும் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த நகைகளை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com