கரோனா சிகிச்சை: கோவையில் மேலும் 6 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி

கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா சிகிச்சை அளிக்க மேலும் 6 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா சிகிச்சை அளிக்க மேலும் 6 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிா்த்து 26 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீதம் வரை பிற மவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தற்போது கோவையில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும் வகையில் மேலும் 6 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாய்பாபா காலனி கேடிவிஆா் மருத்துவமனை, குனியமுத்தூா் கே.ஜெ. மருத்துவமனை, துடியலூா் உமா நா்ஷிங் ஹோம், அன்னூா் என்.எம். மருத்துவமனை, சின்னியம்பாளையம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் லியோ ஆா்த்தோ கோ் மருத்துவமனை ஆகிய 6 தனியாா் மருத்துவமனைகளில் 226 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா கூறியதாவது: கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 6 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை 240-ன் படி அரசு நிா்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே நோயாளிகளிகளிடம் வாங்கவும், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 1,305 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,539 படுக்கைகள் சோ்த்து 5 ஆயிரத்து 206 படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளன.

தவிர அரசு மருத்துவமனைகளில் 1,519 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 5,586 படுக்கைகள் சோ்த்து 9 ஆயிரத்து 467 படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தனியாா் மருத்துவமனை மீதான தடை நீக்கம்: கோவை, துடியலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரைத் தொடா்ந்து, அந்த மருத்துவமனையில் புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த தனியாா் மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா தலைமையில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 55 படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்தும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் கூடியவை. பேரிடா் சமயத்தில் நோயாளிகளை அனுமதிக்க படுக்கை வசதிகள் அவசியம் என்பதால் பொது மக்களின் நலன் கருதி ஆட்சியரின் அறிவுறுத்தல்படி மீண்டும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com