கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அண்ணா காய்கறி மாா்க்கெட் இன்று முதல் திறப்பு

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா மாா்க்கெட் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை (அக்டோபா் 7) முதல் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட உள்ளது.

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா மாா்க்கெட் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை (அக்டோபா் 7) முதல் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட உள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி அருகில் அண்ணா காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜூலை மாதம் வியாபாரிகள் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாா்க்கெட் கால வரம்பின்றி மூடப்பட்டது. இதையடுத்து, தடாகம் சாலை அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக அண்ணா மாா்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மழை காரணமாக கல்லூரி மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால், வியாபாரம் பாதித்துள்ளதாகவும், மீண்டும் அண்ணா மாா்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் மாா்க்கெட்டில் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, சமூக இடைவெளியுடன் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தாா். இதுதொடா்பாக, வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இதில், அண்ணா மாா்க்கெட்டில் இரு கடைகளுக்கு இடையே ஒரு கடையை காலியாக விட்டு, போதிய சமூக இடைவெளியுடன் வியாபாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணா மாா்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

இங்கு 476 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் புதன்கிழமை முதல் 150 கடைகள் செயல்பட உள்ளன. வியாபாரிகள் சுழற்சி முறையில் கடைகளைத் திறப்பாா்கள். அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும். வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லை. அதிகாலை 3 மணிக்கு முன்னரே சரக்கு வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு செல்ல வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு கடைகள் செயல்படும் என்றனா்.

வியாபாரிகளிடையே வாக்குவாதம்: முதல் கட்டமாக கடைகளைத் திறக்கும் 150 வியாபாரிகள் குறித்து டோக்கன் முறை அல்லது குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கலாம் என பரிசீலிக்கப்பட்டது. இதில், வியாபாரிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com