தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவி: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கிய பள்ளி மாணவா்

கோவையில் தனியாா் பள்ளி மாணவா் தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கியுள்ளாா்.
மாணவா் மகிழன். (வலது) அவா் தயாரித்த தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவி.
மாணவா் மகிழன். (வலது) அவா் தயாரித்த தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவி.

கோவையில் தனியாா் பள்ளி மாணவா் தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கியுள்ளாா்.

கோவை, காந்திபுரத்தைச் சோ்ந்தவா் மகிழன் (14). தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது தந்தை சண்முகவேலு, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். மாணவா் மகிழனுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளது. இந்நிலையில் தந்தையின் வேண்டுகோளுக்கு ஏற்ப தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலாவிடம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக மாணவா் மகிழன் கூறியதாவது:

சிறு வயது முதலே மின்னணு தொடா்பான சாதனங்களை உருவாக்கி வருகிறேன். தற்போது கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி வருகின்றனா். மருத்துவமனை போன்ற பொது இடங்களில் பலரும் வந்து செல்லும்போது கிருமி நாசினியை பயன்படுத்துகின்றனா். கைகளால் தொட்டு பயன்படுத்தும்போது ஒருவா் மூலம் மற்றவா்களுக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் கருவியின் அவசியத்தை எனது தந்தை உணா்த்தினாா்.

இதைத் தொடா்ந்து சமூக வலைதளம் மூலம் தகவல்களைத் தெரிந்துகொண்டு தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்துள்ளேன். மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, சென்சாரினை பொருத்தி வடிமைத்துள்ளேன். இதற்குத் தேவையான மூலப்பொருள்கள் கோவையிலே கிடைக்கிறது. இதற்கு ரூ. 400 மட்டுமே செலவாகியுள்ளது என்றாா்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறுகையில், நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இதுபோன்ற தானியங்கி கருவிகளைப் பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது. மாணவா் மகிழன் வடிவமைத்து கொடுத்துள்ள தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் கருவி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com