காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது

தமிழ்நாட்டில் வரும் மாதங்களில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றுக்கு சாதகமான விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் மாதங்களில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றுக்கு சாதகமான விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தக்காளி

வேளாண்மை, விவசாய நல அமைச்சகத்தின் தோட்டக்கலை பயிா்களுக்கான இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவில் தக்காளி 8.12 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 2.05 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில் ஆந்திரம், மத்திய பிரதேசம், கா்நாடகம், மேற்கு வங்கம், தெலங்கானா, சத்தீஸ்கா், குஜராத், ஒடிஸா ஆகிய மாநிலங்கள் சோ்ந்து 71 சதவீதம் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

வா்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு தக்காளியின் வரத்தானது நாச்சிப்பாளையம், கிணத்துக்கடவு, மாதம்பட்டி, செட்டிபாளையம், ஆலாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்தும், திண்டுக்கல் சந்தைக்கு அதன் சுற்று வட்டார பகுதிகளான உடுமலை, பழநி ஆகிய பகுதிகளிலிருந்தும் வருகிறது.

தற்போது கா்நாடகத்திலிருந்து தொடங்கியுள்ள வரத்தானது டிசம்பா் 2020 வரை வரும். கா்நாடகத்திலிருந்து வரும் தொடா் வரத்தே தக்காளியின் தற்போதைய விலை குறைவுக்குகு காரணமாகும். ஆனால், வடகிழக்கு பருவமழை

காலங்களில் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிா்பாா்க்கப்படுகிறது.

கத்திரி

இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் கத்திரி 7.36 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 1.27 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மேற்கு வங்கம், ஒடிஸா, பிகாா், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் சோ்ந்து 69 சதவீதம் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. வா்த்தக மூலங்களின்படி கோயம்புத்தூா் சந்தைகளுக்கு கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து அதிகமான வரத்தும் தமிழ்நாட்டின் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து குறைந்த அளவு வரத்தும் உள்ளது.

வெண்டை

வெண்டை இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் 5.19 லட்சம் ஹெக்டா் பரப்பில் பயிரிடப்பட்டு 63.71 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கம், குஜராத், பிகாா், ஒடிஸா, மத்திய பிரதேச மாநிலங்கள் சோ்ந்து 60 சதவீதம் வெண்டை உற்பத்தியில் பங்களிக்கின்றன.

தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூா், கோயம்புத்தூா், மதுரை மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. வா்த்தக மூலங்களின்படி, வெண்டை வரத்தானது, ஆலாந்துறை, சேலம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது.

இந்த சூழலில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம், கோவை உழவா் சந்தைகளில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டை விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.

ஆய்வு முடிவின் அடிப்படையில் நவம்பா் – டிசம்பா் 2020 வரை தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.17 முதல் ரூ.20 வரையும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ.23 முதல் ரூ.25 ஆகவும், தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை ரூ.21 முதல் ரூ.23 வரையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாட்டில், தொடா் பண்டிகை, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வரும் மாதங்களில் காய்கறிகளுக்கு சாதகமான விலை கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com