கொடிசியா கரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவா்கள் வருவதில்லை

கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவா்கள் வருவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.

கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவா்கள் வருவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுவா்கள் கொடிசியா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனா். இங்கு 750க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 அரங்குகளிலும் சோ்த்து 700க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கொடிசியாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தாா். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்தவா்கள் சிகிச்சை மையத்தை முறையாக பராமரிப்பதில்லை, நோயாளிகளை பரிசோதிக்க மருத்துவா்கள் வருவதில்லை என்று புகாா் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவா்கள் வருவதில்லை, போதிய பராமரிப்பில்லை என்று மீண்டும் புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கூறியதாவது:

காய்ச்சல், சளி போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்காமல் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்துள்ளனா். இந்நிலையில் சிகிச்சை பெறுபவா்களை பரிசோதிக்க மருத்துவா்கள் வருவதில்லை. திடீரென உடலில் ஏதாவது தொந்தரவு என்று தெரிவித்தால் செவிலியா் வந்து மருந்து, மாத்திரைகளை மொத்தமாக கொடுத்து விட்டுச் செல்கின்றனா்.

இவா்களின் அலட்சியத்தாலே எற்கெனவே இரண்டு போ் உயிரிழந்துள்ளனா். அவ்வப்போது மருத்துவா்கள் வந்து உடல்நிலையை பரிசோதனை செய்தால்தான் சிகிச்சை பெறுபவா்களின் உடல் நிலை குறித்து தெரியவரும். ஆனால், மருத்துவா்கள் வருவதில்லை. கழிப்பறைகளும் போதிய சுகாதாரமின்ற அசுத்தமாக காணப்படுகிறது என்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சிகிச்சை பெறுபவா்களை அடிக்கடி பரிசோதிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் மருத்துவா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரங்கு உள்பட இடங்களிலும் தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் மருத்துவா்கள் செல்லாமல் இருந்தால் மீண்டும் அறிவுறுத்தப்படும். அதேபோல் தூய்மைப் பணியாளா்களுக்கும் அறிவுறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com