உற்பத்தி குறைவால் அதிகரிக்கும் தேங்காய் விலை
By DIN | Published On : 20th October 2020 12:14 AM | Last Updated : 20th October 2020 12:14 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி: தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக தேங்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில்தான் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாக்களில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி முதல் ஜூன் வரை தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். இதனால், இந்த காலகட்டத்தில் தேங்காய் விலை குறைந்து காணப்படும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை விளைச்சல் குறைந்து தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். இதனால் இந்த காலங்களில் விலை அதிகமாக இருக்கும்.
தற்போது உற்பத்தி குறைவாக உள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்திலிருந்து தேங்காய் விலை படிப்படியாக அதிகரித்து தற்போது கிலோ குறைந்தபட்சம் ரூ.35 முதல் அதிகபட்சம் ரூ.40 வரை விற்பனையாகிறது. அதேபோல கொப்பரை விலையும் கிலோ ரூ.118 முதல் ரூ.121 வரை விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ஒரு கிலோ தேங்காய் விலை அதிகபட்சமாக ரூ.36ஐ தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு ரூ.40ஐ எட்டியுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்னும் சில மாதங்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட தேங்காய் உற்பத்தியாளா், விற்பனையாளா் சங்கத் தலைவா் சண்முகசுந்தரம் கூறியதாவது:
தேங்காய் உற்பத்தி குறைவாக உள்ளதால் விலை அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, ஆந்திரம், கேரளம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது என்றாா்.