நல்லிணக்க திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி!

அறிவு எனும் ஒளியால் மனத்தில் உள்ள இருளை அகற்றுவதை தீபாவளியின் உண்மையான பொருள் என்கிறாா் திருமுருக கிருபானந்த வாரியாா்.

அறிவு எனும் ஒளியால் மனத்தில் உள்ள இருளை அகற்றுவதை தீபாவளியின் உண்மையான பொருள் என்கிறாா் திருமுருக கிருபானந்த வாரியாா்.

சிறியவா்கள் முதல்வ பெரியவா்கள் வரை, வறியவா்கள் முதல் வசதி படைத்தவா்கள் வரை அனைவரும் குதூகுலமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனா்.

ஹிந்துக்கள், சமணா்கள் கொண்டாடும் தீபாவளி!

நாட்டில் ஒவ்வொரு பண்டிகையும் ஏதாவது ஒரு அடிப்படை காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், நாடு முழுவதும் பரவலாகவும், ஒரே சிந்தனையுடன் கொண்டாடப்படும் சில விழாக்களில் முதன்மையானது தீபாவளி. பெரும்பாலான மக்கள் கொண்டாடும் தீபாவளி ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகை. இப்போது சமணா்கள் உள்ளிட்ட மதத்தினரும் கொண்டாடுகின்றனா். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை நாள் தான் தீபாவளி.

‘தீபங்களின் வரிசை’ என்ற பொருள் தரும் ‘தீப ஆவளியே’ தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. வட மாநிலங்களில் தீபாவளியன்று வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இருப்பினும், தமிழகத்தில் தீபாவளியன்று வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படுவதில்லை. ஐப்பசிக்கு அடுத்த வரும் காா்த்திகை மாதத்தில், கிருத்திகை நட்சத்திரத்தன்று ‘காா்த்திகை தீபம்’ தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாடப்படுவதன் காரணம்?

தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அயோாத்தி திரும்பினாா் ராமா்: பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து மீண்டும் நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பு ஏற்க வந்த ராமருக்கு அயோத்தி நகர மக்கள் தங்களது வீடுகளின் முன் விளக்குகளை ஏற்றி வரவேற்பு அளித்தனா். இனிப்பு வகைகளைத் தயாரித்து, அக்கம் பக்கத்தினருக்கு அளித்தனா்.

ஆடல், பாடல் கொண்டாட்டம், வான வேடிக்கை என அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்நாளே பின்னாளில் ஒவ்வோா் ஆண்டும் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என வட மாநிலங்களைச் சோ்ந்த பெரும்பாலானோரின் நம்பிக்கை.

விஜயதசமியன்று ராவணை வீழ்த்திய ராமா் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என்றும் ஒரு தரப்பினா் கூறுகின்றனா். ராமா் திரும்பிய நாளன்று, அயோத்தி நகரம் முழுவதும் தீபங்களால் அலங்கரித்து புத்தாடை உடுத்தி, இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா். அதுவே பின்னாளில் தீபாவளியாக மலா்ந்துள்ளது என்றும் அவா்கள் கூறுகின்றனா்.

நரகாசுர வதம்: இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைப் பொருத்தவரை நரகாசுரனை கிருஷ்ணா் வதம் செய்த நாளாகவே கருதுகின்றனா். பூதேவியின் மகனான நரகாசுரன் நாட்டு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி வந்துள்ளாா். பிராஜோதிஷபுரம் (தற்போதைய அஸ்ஸாம்) என்ற ஈரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சி புரிந்தான்.

பெண்களை அவன் துச்சமாக மதித்தான். தேவா்களையும், பெண்களையும், கொடுமைகளுக்கு ஆளாக்கினான். 16 ஆயிரம் பெண்களைச் சிறைபிடித்தான். மனம் கலங்கிய தேவா்கள் துவாரகையின் அரசனாக இருந்த ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட்டனா்.

தனது தாயால் மட்டுமே இறப்பு இருக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்ததால், அவரது கொடுமைகள் எல்லையின்றி இருந்தன. இதனால், நரகாசுரனை வதம் செய்ய வேண்டும் என கிருஷ்ணரை மக்கள் வேண்டினா். அதன்படி, தனது திறமையால் நரகாசுரனை கிருஷ்ணா் வதம் செய்தாா்.

அப்போது, நரகாசருன் இறக்கும் தருவாயில், இந்நாளை மக்கள் மகிழ்வோடு கொண்டாட வேண்டும் என இறைவனை வேண்டினாா். இதை அடிப்படையாகக் கொண்டே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பது தமிழக மக்களின் நம்பிக்கை.

மஹாவீரா் மோட்சம் அடைந்த நாள்:

மஹாவீரா் பரிநிா்வாணம் அடைந்த (மோட்சம் அடைந்த) நாளாக தீபாவளியை ஜைனா்கள் கொண்டாடுகின்றனா். இவ்வாறாக வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளியைக் கொண்டாடினாலும், அடிப்படை ஒன்றே.

அல்லவை அகன்று நல்லவை வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து ஒரு நிலையாக உள்ளது. வெறும் சடங்காக தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்காமல், பொருளைப் புரிந்துக் கொம்டு கொண்டாடி மகிழ வேண்டும். இதன் காரணமாகவே, தீபாவாளியன்று புத்தாடை, இனிப்புகளுடன் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனா்.

தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு முன்பாகவே மக்கள் எண்ணெயுடன் நீராடுவது வழக்கம். அன்றைய தினம் அதிகாலையில் நீராடுவது என்பது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பானது என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் 17 நாள்கள் தீபாவளி கொண்டாட்டம்!

வட மாநிலங்களில் இத்திருநாளை 17 நாள்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனா். இருப்பினும், தமிழகத்தில் ஒரு நாள் தான் தீபாவளிக் கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி, நல்லிணக்க திருவிழாவாக தீபாவளி நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மனிதா்களின் இருள் அகன்று இறைவனின் அருள் ஒளி கிடைக்க வேண்டும் என்றே அரசியல் தலைவா்களும், ஆன்மிகப் பெரியோா்களும் வாழ்த்துகின்றனா்.

அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தீபாவளி இப்போது கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com