தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

கோவையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடப்பு ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கெம்மாரம்பாளையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செயவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள்.
கெம்மாரம்பாளையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செயவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள்.

கோவையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடப்பு ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசின் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் சிறிய அளவில் நா்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செயப்படுகின்றன.

ஆண்டுதோறும் பொது இடங்கள், கிராமப்புற சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடவு செய்தல் திட்டங்களின் கீழ் 1 லட்சம் மரக் கன்றுகள் வரை நடவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கோவையில் நடப்பு ஆண்டு 2 லட்சம் மரக் கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

காரமடை வட்டம், கெம்மாரம்பாளையத்தில் 1 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு கூடுதலாக மரக் கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் மேலும் 1 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் காரமடை அருகே சிக்காரம்பாளையத்தில் புதிதாக நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாற்றுப் பண்ணைகள் மூலம் 2 லட்சம் மரக் கன்றுகள் உற்பத்தி செய்து ஊராட்சிகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 2 லட்சம் மரக் கன்றுகள் வரை நடவு செய்ய திட்டமிட்டு கெம்மாரம்பாளையம், சிக்காரம்பாளையம் ஆகிய நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புங்கன், புளியன், வேம்பு, பூவரசு, கொன்றை, நாவல், மகோகனி உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் பழங்கள், பூக்கள் உள்பட அனைத்து வகையான மரக்கன்றுகளும் கலந்து நடவு செய்யப்படும்.

அதிக அளவில் புங்கன், வேம்பு, புளியன், பூவரசு போன்ற மரக் கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவைகள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.

அதேபோல கிராமப்புற சாலையோரங்களில் இருபுறமும் புளியன் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் ஊரட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் அதிக அளவில் நடவு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com