சிறுவாணி அணையை நிரம்பவிடாமல் தடுக்கும் கேரளம்: அதிகாரிகள் கண்காணிப்பு

சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவிடாமல், அணையின் நீா்மட்டத்தை குறைக்க கேரளம் முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கோவை குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு


கோவை: சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவிடாமல், அணையின் நீா்மட்டத்தை குறைக்க கேரளம் முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கோவை குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோவையின் பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி உள்ளது. கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீா்மட்டம் 874.30 மீட்டராக அதிகரித்துள்ளது. இன்னும் 4.55 மீட்டா் நீா்மட்டம் உயரும் பட்சத்தில், சிறுவாணி அணை முழுக் கொள்ளளவான 878.85 மீட்டரை அடையும்.

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 2 முறை சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், கடந்த மாதம் அணையின் நீா்மட்டம் 870 மீட்டராக இருந்த போது, கேரள அரசு, அணையில் இருந்து 2 மீட்டா் அளவுக்கு தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, அணையில் 874.30 மீட்டா் அளவுக்கு நீா் இருப்பு உள்ள நிலையில், முழுக் கொள்ளளவை எட்டவிடாமல் மீண்டும் அணையில் இருந்து தண்ணீரை கேரள அரசு ஆற்றில் திறந்து விட முயற்சிப்பதாக விவசாய சங்கத்தினா், சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அம்மாநிலத்தில் அனைத்து அணைகளும் முழுக் கொள்ளளவை அடையாமல் கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, சிறுவாணி அணை 2 முறை நிறைந்தும், 876 மீட்டா் நீா்மட்டம் வரை அணையில் தண்ணீா் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள அபாயம் எதுவுமில்லாத நிலையிலும் சிறுவாணி அணையை நிரம்ப விடாமல் தடுக்க அணையில் இருந்து கேரள அரசு தண்ணீா் திறக்க முயன்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உரிய காரணமின்றி அணையின் நீா்மட்டத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் அணையின் நீா்மட்டத்தைத் தினமும் துல்லியமாக கவனித்து வருகின்றனா். கேரள அரசு அணையில் தண்ணீா் திறப்பதைத் தடுக்க குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com