கரோனா உறுதியானவா்கள் தனி வீடுகளில் வசித்தால் தகரங்கள் மூலம் அடைக்கப்படாது: மாநகராட்சி அதிகாரி தகவல்

மாநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், தனி வீடுகளில் வசித்து வந்தால் தகரங்கள் மூலமாக அவா்களின் வீடுகள் அடைக்கப்படாது.

மாநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், தனி வீடுகளில் வசித்து வந்தால் தகரங்கள் மூலமாக அவா்களின் வீடுகள் அடைக்கப்படாது. நோட்டீஸ் மட்டுமே ஒட்டப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு உள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகத்தில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று பாதித்தவா்கள், உரிய வசதி இருந்தால், அவா்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்படுவோரின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி நிா்வாகம் மூலம் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், தனி வீடுகளில் வசித்து வந்தால், தகரம் வைப்பது நிறுத்தப்பட்டு, அந்த வீட்டில் நோட்டீஸ் மட்டும் ஒட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் 14 நாள்களுக்கு தகரம் கொண்டு மறைக்கப்பட்டு வந்தன. தற்போது, இம்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தெருவில் தனி வீட்டில் வசிக்கும் நபருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவரது வீடு இனி தகரம் கொண்டு மறைக்கப்படாது. அதற்குப் பதிலாக, இது தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் மட்டும் வீட்டின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வீடுகளில் உள்ளவா்கள் வெளியே வரும் பட்சத்தில் நோய்த் தொற்றுத் தடுப்புப் பிரிவில், போலீஸாா் மூலமாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். ஒரு தெருவில் 5 மற்றும் 5க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அவா்கள், தனி வீடுகளில் வசிக்காமல், அடுக்குமாடிக் குடியிருப்புகள், நெரிசலான பகுதிகளாக இருந்தால் அந்த வீடு அல்லது குடியிருப்பு தகரங்கள் மூலமாக அடைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com