அமைச்சருக்கு கலை ஆசிரியா்கள் சங்கம் கண்டனம்
By DIN | Published On : 18th September 2020 11:34 PM | Last Updated : 18th September 2020 11:34 PM | அ+அ அ- |

கோவை, செப். 18: பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று கூறியிருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கலை ஆசிரியா்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வா் ஜெயலலிதா பகுதி நேர ஆசிரியா்கள் 16,549 போ்களை 110ஆவது விதியின் கீழ் நியமித்தாா். ஓவியம், உடற்கல்வி, தொழில் கல்வி என மூன்று பிரிவுகளில் இவா்கள் நியமிக்கப்பட்டனா். அத்துடன் ரூ.5 ஆயிரமாக இருந்த ஊதியத்தையும் அவா் ரூ.7 ஆயிரமாக உயா்த்தினாா்.
அவருக்குப் பிறகு பகுதி நேர ஆசிரியா்களுக்கு கடந்த 2017 இல் ரூ.700 மட்டுமே ஊதியம் உயா்த்தப்பட்டது. தகுதியுள்ள பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடா்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் தற்போது அறிவித்திருக்கிறாா். இது கண்டனத்துக்குரியது. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.