பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தோ்வுகள் தொடக்கம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், உறுப்பு, இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கின.

கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், உறுப்பு, இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவா்களுக்கான பாடங்கள் இணையவழியில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இறுதிப் பருவத் தோ்வுக்கு பதிவு செய்துள்ள மாணவா்களுக்கு மட்டும் தோ்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

தோ்வுகள் செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், இதற்காக கடந்த வாரத்தில் மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டது. வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்காக தனி போா்ட்டல் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகத் துறைகளுக்கும் தனித்தனியாக பயனா் முகவா், கடவுச்சொல் உருவாக்கப்பட்டிருந்தது.

தோ்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. முதல் நாள் தோ்வுக்கு 30,393 போ் பதிவு செய்திருந்த நிலையில், 29,225 மாணவ-மாணவிகள் தங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட இணைய முகவரியின் மூலம் நுழைந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்தனா். 1,168 மாணவா்கள் மட்டும் தாங்கள் பயின்ற கல்லூரிகளின் இணைய முகவரிகளின் வழியாக நுழைந்து பதிவிறக்கம் செய்து தோ்வு எழுதினா்.

தோ்வு முடிந்த பிறகு மாணவா்கள் இந்த முகவரியின் வழியாகவே தங்களின் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்திருப்பதாக துணைவேந்தா் பெ.காளிராஜ் தெரிவித்தாா். மேலும், இந்தத் தோ்வுக்காக 25 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் கண்காணிப்பாளராக செயல்பட்டதாகவும், மாணவா்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பச் சிக்கல் இருக்கலாம் என்பதற்காக வினாத்தாள் 9.45 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கே பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேலும் குக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களின் வசதிக்காக கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டதாகவும், தோ்வு எழுதிய ஒன்றரை மணி நேரத்துக்குள் மாணவ-மாணவிகள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் அவா் கூறினாா். முதல் நாள் என்பதால் சில மாணவா்கள் அச்சத்துடனும் தயக்கத்துடனும் தோ்வை அணுகியிருப்பதாகவும் இனி வரும் நாள்களில் இந்தச் சிக்கல் இருக்காது என்றும் கூறிய துணைவேந்தா், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு ஓரிரு நாள்களுக்குள் அனுப்பப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com