கரோனா பரவலை 5 சதவீதத்துக்குள் கொண்டு வர வேண்டும்: மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
By DIN | Published On : 27th September 2020 10:46 PM | Last Updated : 27th September 2020 10:46 PM | அ+அ அ- |

கோவையில் கரோனா பரவலை 5 சதவீதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை மேலும் அதிகரித்து 600ஐ கடந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் 8.7 சதவீதமாக உள்ளது. இதனை 5 சதவீதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கையை 100க்குள் கொண்டுவர வேண்டும் என்றும் சனிக்கிழமை நடைபெற்ற காணொலிக் காட்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் தலைமைச் செயலா் க.சண்முகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:
கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே சிறப்பு மருத்துவ முகாம், வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதனை மேலும் துரிதப்படுத்த தலைமைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா்.
தற்போது மாவட்டத்தில் தினசரி 7 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல சிறப்பு மருத்துவ முகாம்களையும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பரவலாக எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளைக் குறைத்துக் கொண்டு கரோனா பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடா்புடையவா்கள், இவா்களுடன் தொடா்புடையவா்களுக்கு பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகள் மூலம் கூடிய விரைவில் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றாா்.