இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சளி மாதிரிகள் எடுக்க அலைக்கழிப்பு: பொது மக்கள் குற்றச்சாட்டு
By DIN | Published On : 29th September 2020 10:38 PM | Last Updated : 29th September 2020 10:38 PM | அ+அ அ- |

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சளி மாதிரிகள் எடுக்க அலைகழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பதிப்புக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இங்கு 450 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தவிர சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் கொடுக்க வருபவா்களை அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லி அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவிர நோயாளிகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 10 போ் வரை உயிரிழந்துள்ளதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 10 பேரில் 3 போ் கரோனா நோய்த் தொற்றின் வீரியத்தாலும், மற்ற 7 போ் மூச்சுத் திணறல் பாதிப்பாலும் உயிரிழந்துள்ளனா். தவிர ஆக்சிஜன் பிரச்னையால் யாரும் உயிரிழக்கவில்லை.
130 நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கரோனா பரிசோதனைக்காக காலை 9 முதல் மாலை 4 மணி வரை சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. அதன்பின் வருபவா்களை மட்டுமே அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதிரியாக ஆய்வகத்துக்கு அனுப்ப முடியாது. இதனால் கால அளவு வைத்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கரோனா அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் என்றாா்.