கோவை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிறைவு
By DIN | Published On : 29th September 2020 10:39 PM | Last Updated : 29th September 2020 10:39 PM | அ+அ அ- |

கோவை அரசு கலைக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் நடத்தப்படும் 24 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,433 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட்டு வந்தனா். இந்த ஆண்டு 20 சதவீத இடங்களை அதிகரித்து அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து 1,719 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இறுதிக் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்கள் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கணிதம் உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் ஓரிரு இடங்கள் மட்டுமே இருப்பதாகவும், இனி அரசு கூடுதல் கால அவகாசம் அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.