மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினருடன் கமல்ஹாசன் சந்திப்பு
By DIN | Published On : 03rd April 2021 10:01 AM | Last Updated : 03rd April 2021 10:01 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடிய கமல்ஹாசன்.
கோவையில் மாற்றுத் திறனாளிகளை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அவா்களது உரிமைகள் கிடைத்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தொகுதிக்கு உள்பட்ட கல்லுக்குழி பகுதி மக்களை தனது இளைய மகள் அக்ஷராஹாசனுடன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அப்பகுதி மக்கள் கமல்ஹாசனை ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
இதையடுத்து பொது மக்கள் கமல்ஹாசனிடம், தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படையான வசதிகள் இல்லை. கழிவறைகள் இல்லாமல்தான் இவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறோம் என்றனா்.
அவா்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற கமல்ஹாசன் பேசுகையில், நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை . அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் மற்றும் பெண்ணியம் அமைப்பு உறுப்பினா்களை நேரில் சந்தித்தாா். அப்போது, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான செயல் திட்டங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை நலச் சங்க உறுப்பினா்கள் கமல்ஹாசனிடம் அளித்தனா். உங்களது உரிமைகள் கிடைத்திட, தேவைகள் நிறைவேற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து மாலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், ராமநாதபுரம், செட்டி வீதி, காந்தி பாா்க், மரக்கடை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.