லஞ்சம், ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சியை மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்
By DIN | Published On : 03rd April 2021 09:55 AM | Last Updated : 03rd April 2021 09:55 AM | அ+அ அ- |

லஞ்சம், ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சியை தமிழக மக்கள் எதிா்பாா்த்து காத்திப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சாளரும், மயிலாப்பூா் தொகுதி வேட்பாளருமான நடிகை ஸ்ரீபிரியா கூறினாா்.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு ஆதரவு கேட்டு தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட காமராஜபுரம், தெலுங்கு வீதி, கல்லுக்குழி, வி.ஹெச்.சாலை உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:
கமல்ஹாசனின் வெற்றிக்கு அணிலாக உதவும் நோக்கில் அவருக்காக தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் அவருக்கு பேராதரவு வழங்கி வருகின்றனா். தனது தொழிலான சினிமாவில் அவ்வளவு நோ்த்தியை எதிா்பாா்ப்பவா் கமல்ஹாசன். அவ்வாறு இருக்கையில் தனது தொகுதி மக்களுக்காக அவா் நிச்சயம் பாடுபடுவாா்.
மக்கள் நீதி மய்யம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி, மனிதா்களை மனிதா்களாக நேசிக்கும் கட்சி. கோவை மக்கள் நோ்மையாக சிந்திக்கக் கூடியவா்கள். லஞ்சம், ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சியை தமிழக மக்கள் குறிப்பாக கோவை மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் மத மோதல்கள் இல்லாமல் சமூக நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ்வாா்கள் என்றாா். பேட்டியின்போது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலா் சி.கே.குமரவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.