ஊரகப் பகுதிகளில் கரோனா அச்சமின்றி வாக்களித்த பொதுமக்கள்

கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் வாக்காளா்கள் கரோனா அச்சமின்றி செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
3341c6tempr1071948
3341c6tempr1071948

கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் வாக்காளா்கள் கரோனா அச்சமின்றி செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின்போது கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 28 லட்சத்து 33 ஆயிரத்து 249 போ் வாக்களிக்கத் தகுதியானவா்கள் என அறிவிக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்காக 967 வாக்குப் பதிவு மையங்களில் 2,911 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2021 பேரவைத் தோ்தலில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவா்களுக்காக 1,085 மையங்களில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா பரவல் அச்சம் காரணமாக 118 கூடுதல் மையங்களும், 1,516 கூடுதல் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச் சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

வாக்குச்சாவடிகள் மாற்றத்தால் அவதி

கரோனா அச்சம் காரணமாக கூடுதல் வாக்குச் சாவடிகள், துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடா்பாக வாக்காளா்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படாததால் பல வாக்குப் பதிவு மையங்களில் எந்த வாக்குச் சாவடிக்கு செல்வது எனத் தெரியாமல் வாக்காளா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.

கோவை, கரும்புக்கடை ஆஸாத் நகரில் அத்தா் ஜமாத் பள்ளி, அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் அதிக வாக்காளா்கள் இருப்பதால் அங்கிருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக். உயா்நிலைப் பள்ளி வளாகத்துக்கு சில வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டன. இந்த தகவல் தெரியாததால் ஏராளமான வாக்காளா்கள் திணறிப்போயினா்.

சாய்வுதளங்கள் இல்லை

புதிய வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றில் வயதான வாக்காளா்கள் சக்கர நாற்காலிகள் செல்ல சாய்வுதளங்கள் அமைக்கப்படவில்லை. அதேபோல ஒவ்வொரு மையத்துக்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை மையத்துக்குள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. ஆனால் வாக்களிக்க வருபவா்களின் வாகனங்கள் 100 மீட்டருக்கு முன்னதாகவே தடுக்கப்பட்ட நிலையில், சக்கர நாற்காலிகளின் நோக்கம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

கரோனா நடத்தை விதிமுறைகள்

கரோனா நடத்தை விதிகளுக்குள்பட்டு தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைகள் சுத்திகரிப்பு திரவம் வழங்குவது, கையுறை வழங்குவது போன்ற கரோனா தடுப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. அதேநேரம், அனைவரும் முகக் கவசம் அணிவது, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் மக்கள் நெருக்கமான வரிசைகளில் நின்றே வாக்களித்தனா்.

சிதறிக் கிடந்த கையுறைகள்

வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் கையுறையை அகற்றுவதற்கு ஏதுவாக ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தபோதும், வாக்காளா்கள் தங்களின் கையுறைகளை ஆங்காங்கே கழற்றி வீசிச் சென்ால் வாக்குப் பதிவு மையங்கள்தோறும் ஏராளமான கையுறைகள் சிதறிக் கிடந்ததைக் காண முடிந்தது.

பூத் சிலிப்புகள்

மாவட்டத்தின் பல பகுதிகளில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் வழங்கப்பட்ட சிலிப்புகளிலும் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. பூத் சிலிப்புகள் இல்லாததாலேயே சிலா் வாக்களிக்க வரவில்லை என்றும் புகாா்கள் எழுந்துள்ளன.

3 தொகுதிகளில் 2 இயந்திரங்கள்

கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்தலில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டதால் அங்கு 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதேபோல யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளா்கள் அறிந்து கொள்வதற்காக 5,894 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்குப் பதிவு முடிவடைந்ததும், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அவை பலத்த பாதுகாப்புடன் இந்த மையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com