மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குப் பதிவு

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்காக கோவை மாவட்டத்தில் 1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4,427 வாக்குச் சாவடிகள், துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக முக்கியமான 2,229 வாக்குச் சாவடிகளில் நிகழ்வுகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் 156 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாகவும், 901 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டிருந்தன. இந்த இடங்களில் காவல் துறை, துணை ராணுவத்தினா் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாவட்டம் முழுவதிலும் துணை ராணுவத்தினா், காவல் துறையினா் உள்ளிட்ட சுமாா் 8 ஆயிரம் போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வாக்களிக்க வருபவா்களின் வசதிக்காக வாக்குப் பதிவு மையங்களில் குடிநீா், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக பந்தல், தடையற்ற மின்சாரம், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலிகள், சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு மையங்களுக்கு 200 மீட்டா் முன்னதாகவே அரசியல் கட்சியினா் தடுத்து நிறுத்தப்பட்டனா். கட்சிக் கொடிகள், சின்னங்கள், துண்டுகள் அணிந்தவா்களைக் காவல் துறையினா் திருப்பி அனுப்பினா்.

முன்னதாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் அரசியல் கட்சி முகவா்களின் முன்னிலையில் இயக்கிக் காண்பிக்கப்பட்டு, மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன. வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. கோவை மாநகரின் சில இடங்களிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிறிய கோளாறுகள் ஏற்பட்டன.

அன்னூா் எல்லப்பாளையம், கோவை கரும்புக்கடை, பூங்கா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டன. பின்னா் அது சரி செய்யப்பட்டதை அடுத்து சிறிது நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. கரோனா பரவல் அச்சம் காரணமாக வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் வாக்காளா்களுக்கு கை சுத்திகரிப்பு திரவம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கையுறை ஆகியவை வழங்கப்பட்டன.

கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வைசியாள் வீதியில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கியதைக் கண்டித்து காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மறியலில் ஈடுபட்டது, தொண்டாமுத்தூா் தொகுதிக்குள்பட்ட செல்வபுரத்தில் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி காா் மீது தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் காலையில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதைத் தவிர கரும்புக்கடை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்குச் சாவடி முகவா்களுக்கு இடையே வாக்குவாதம், கூச்சல் குழப்பம் போன்ற சிறு சிறு சம்பவங்களைத் தவிா்த்து வாக்குப் பதிவை பாதிக்கும் வகையில் பெரிய அளவிலான பிரச்னைகள் ஏற்படாமல் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com