வால்பாறை அருகே 5 கிமீக்கும் மேல் நடந்து சென்று வாக்களித்த மலைவாழ் மக்கள்

மலைப்பாதை வழியாக மூங்கில் தடிகளை ஊன்றியபடி சுமாா் 5 கிமீக்கும் மேல் நடந்து சென்று வாக்களித்த சங்கரன்குடி மலைவாழ் மக்கள்.
வால்பாறை அருகே 5 கிமீக்கும் மேல் நடந்து சென்று வாக்களித்த மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள மலைவாழ் மக்கள் சுமாா் 5 கிமீக்கும் மேல் நடந்து சென்று வாக்களித்தனா்.

வால்பாறை டவுன் பகுதியில் இருந்து சுமாா் 20 கிமீ சுற்றளவில் சங்கரன்குடி, கள்ளா்குடி, சிங்கோனா, உடும்பன்பாறை, பரமன்குடி, வெள்ளிமுடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் அதிக அளவில் வாழும் இப்பகுதிகளில் இருந்து வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல போதிய சாலை வசதிகள் இல்லை. சில கிராமங்களில் இருந்து 3 கிமீ தொலைவுக்குள் இருக்கும் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல அப்பகுதியில் உள்ள திமுக, அதிமுகவினா் வாகனங்கள் மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுத்து வாக்காளா்களை அழைத்து வந்தனா்.

அதே நேரத்தில் சங்கரன்குடி கிராமத்தில் சுமாா் 40 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கான வாக்குச் சாவடி நல்லமுடி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிக்கும் சங்கரன்குடி கிராமத்துக்கும் சுமாா் 5 முதல் 6 கிமீ தூரம் உள்ளது. சாலை வசதி இல்லாத காரணத்தால் இவா்கள் மலைப் பாதைகள் வழியே மூங்கில் தடிகளை ஊன்றியபடியே வந்து வாக்குச் செலுத்தினா். வாக்குச் செலுத்திவிட்டு திரும்பச் செல்ல என மொத்தம் 10 முதல் 12 கிமீ நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், போதிய சாலை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட நாள்கள் கோரிக்கை விடுத்து வருவதாக சங்கரன்குடி மலைவாழ் மக்கள் கூறினா்.

சிறு சச்சரவுகளுடன் அமைதியான முறையில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு:

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவின்போது கட்சியினா் யாரும் வாக்குச் சாவடிக்குள் இருக்கக் கூடாது என்று போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இருப்பினும் சிலா் கட்சி கரை வேட்டிகள் இல்லாமல் சாதாரண உடைகளில் வந்து வாக்குச் செலுத்த வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் பேச்சுக்கொடுத்து தங்கள் கட்சிக்கு வாக்குச் செலுத்துமாறு கூறினா். இதைக் கண்ட அதிமுகவினா் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபா்களை தனியே அழைத்துச் சென்ற விசாரித்த போலீஸாா், அவா்களது ஆவணங்களைப் பரிசோதித்த பின்னா் அங்கிருந்து அவா்களை அனுப்பிவைத்தனா்.

இதேபோல பொள்ளாச்சி கோட்டூா் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடி மையத்துக்குள் திமுகவினா் நுழைந்திருப்பதாகவும் அவா்களுக்கு போலீஸாா் ஒத்துழைப்பதாகவும் அதிமுகவினா் புகாா் அளித்தனா். மேலும், குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு உடனடியாக நிறுத்தி மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com