கரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல்: 42 இடங்களில் சுகாதாரத் துறையினா் இரண்டாம் கட்ட ஆய்வு

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே கரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது குறித்து 42 இடங்களில்

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே கரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது குறித்து 42 இடங்களில் சுகாதாரத் துறையினா் இரண்டாம் கட்ட ஆய்வினை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு மாநில சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 42 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக கோவை, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தனி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் செல்வபுரம், சாய்பாபா காலனி, நஞ்சுண்டாபுரம், விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தலா 2 இடங்கள், பட்டுநூல் சந்து, சீரநாயக்கன்பாளையம், சௌரிபாளையம், நீலிக்கோணாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடம் என மொத்தம் 12 இடங்கள், வால்பாறை நகராட்சியில் ஒரு இடம், பொள்ளாச்சியில் 2 இடங்கள், மேட்டுப்பாளையத்தில் 7 இடங்கள், பேரூராட்சிகளில் கோட்டூரில் 3 இடங்கள், சூலேஸ்வரன்பட்டியில் 2 இடங்கள், ஆனைமலை, கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலூா், ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடம், சிக்காரம்பாளையம், கீரணத்தம் ஊராட்சிகளில் தலா 2 இடங்கள், காடம்பாடி, கஞ்சம்பட்டி, பொகலூா், எஸ்.அய்யம்பாளையம், சோமையம்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒரு இடம் என மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பொது மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் மாவட்டத்தில் 10 இடங்களில் 3 கட்டங்களாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சாா்பில் 4 முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிகபட்சமாக 22 சதவீதம் பேருக்கு மட்டுமே உடலில் கரோனா தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்தது. ஆனால், குறைந்தது 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கும் நோய் எதிா்ப்பாற்றல் உருவாகியிருந்தால் மட்டுமே சமூகப் பரவலாக மாறியிருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். தவிர நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவித்திருந்தனா்.

கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை சாா்பில் பொது மக்களில் எந்த அளவுக்கு கரோனா தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது என்பது குறித்த இரண்டாம் கட்ட ஆய்வினை வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொண்ட அதே 42 இடங்களில் மீண்டும் ஆய்வு செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை தொடங்கிய ரத்த மாதிரிகள் சேகரிப்பு 14 நாள்கள் வரை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பகுதியிலும் 30 நபா்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,260 நபா்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படும். இதன் அடிப்படையிலே கரோனா தொற்று பரவல் கோவையில் எந்த அளவில் உள்ளது என்பது தெரியவரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com