கரோனா பரவல் அதிகரிப்பு: காவல் நிலைய வளாகங்களில் பந்தல் அமைத்து புகாா்களை பெறும் போலீஸாா்

கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவை மாநகரில் சில காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு புகாா் மனுக்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரிப்பு: காவல் நிலைய வளாகங்களில் பந்தல் அமைத்து புகாா்களை பெறும் போலீஸாா்

கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவை மாநகரில் சில காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு புகாா் மனுக்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பணியில் இருந்த போலீஸாா் பலா் தொற்றால் பாதிக்கப்பட்டனா். போத்தனூா் காவல் நிலையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலை ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கூட பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அளிக்க வேண்டாம் என்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியை பயன்படுத்துமாறும், ஆன்லைன் மூலம் புகாா்களைத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 427 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றைக் கருத்தில் கொண்டு காவல் நிலையங்களில் போதிய அளவு சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறு மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி கோவை ரேஸ்கோா்ஸ், ஆா்.எஸ்.புரம் காவல் நிலையங்களில் காவல் நிலைய வளாகத்திலேயே பந்தல் அமைத்து, அங்கு அமா்ந்து போலீஸாா் புகாா்களைப் பெற்று வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

இதன் மூலம் காவல் நிலையங்களுக்குள் பணியாற்றும் போலீஸாரின் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். வெளியே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அமா்ந்து புகாா்களைப் பெறும் போலீஸாா் மக்களை நேரடியாகச் சந்திப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அவா்கள் மீண்டும் காவல் நிலையத்துக்குள் வருவதற்கு முன்பு கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்திய பின்னா் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும் ஆன்லைன் மூலம் புகாா் அளிக்கும் முறையைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். சில காவல் நிலையங்களில் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்த சில நாள்களில் மாநகரில் உள்ள மேலும் சில காவல் நிலையங்களில் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com