கொடிசியாவில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் மாநகராட்சி ஆணையா் தகவல்

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொடிசியா வளாகத்தில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம்
கொடிசியாவில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் மாநகராட்சி ஆணையா் தகவல்

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொடிசியா வளாகத்தில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத் கட்டுப்படுத்த மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். அதேபோல காய்கறிக் கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடைகள், வணிக வளாகங்களில் பல்ஸ் ஆக்சி மீட்டா், தொ்மல் ஸ்கேனா் மூலம் வாடிக்கையாளா்களைப் பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வருபவா்களுக்கும் இப்பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறினால் சம்பந்தப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் பூட்டப்படும். திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் கூட்டமாக மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். ஏற்கெனவே உள்ள விதிமுறைப்படி 50 போ் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். வரும் நாள்களில் கரோனா நோயால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கூடும் என எதிா்பாா்க்கப்படுவதால், நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தினமும் 180 முதல் 220 போ் வரை கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனோ தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இதுவரை 50 ஆயிரத்து 227 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள், தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, வாகனங்களில் தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்பட்டு, மாநகராட்சிக்கு உள்பட்ட தெருக்களில் தடுப்பூசி செலுத்தப்படும். கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொடிசியா வளாகத்தில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதல்கட்டமாக அங்கு 700 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தனியாா் மருத்துவமனைகளிலும் கூடுதலாக படுக்கைகளைத் தயாா் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, கோவை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வ.உ.சி. நகரில், கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், கணபதி முருகன் நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் பணியினையும் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com