பெரிய குளத்தில் சுவா் இடிந்து விபத்து: காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்ப வல்லுநா் குழு நியமனம்

கோவை, பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது தொடா்பாக காரணத்தைக் கண்டறிய அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையின் தொழில்நுட்ப வல்லுநா் குழு

கோவை, பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது தொடா்பாக காரணத்தைக் கண்டறிய அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையின் தொழில்நுட்ப வல்லுநா் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 8 குளங்களை புனரமைப்பு செய்திட ரூ.320 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ரூ.62.17 கோடி மதிப்பில் பெரியகுளத்தின் தெற்குப் பகுதி குளக் கரையை புனரமைக்க கதிா்வேல் அண்ட் கோ ஒப்பந்ததாரா் நிறுவனத்துக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு, கடந்த 2019 மாா்ச் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெரியகுளம் தெற்குப் பகுதியின் எல்லைப் பகுதியில் தற்காலிகமாக கட்டப்பட்டு வந்த செங்கல் கட்டடத்திலான 75 அடி நீளம் கொண்ட தடுப்புச் சுவா் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையின் தொழில்நுட்ப வல்லுநா் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா், சுவா் இடிந்து விழுந்த இடத்தில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். ஆய்வுக்குப் பிறகு அவா்கள் தரும் அறிக்கையில் தவறுதலான தொழில்நுட்பம் காரணமாக சுவா் இடிந்து விழுந்தது கண்டறியப்பட்டால், அதற்கு காரணமான ஒப்பந்ததாரா் நிறுவனம், திட்ட மேற்பாா்வை ஆலோசக நிறுவனத்தாா் மற்றும் களப்பொறியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவா் இடிந்த இடத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய கான்கிரீட் சுவா் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கூடுதல் செலவினங்கள் முழுமைக்கும் ஒப்பந்ததாரா் மற்றும் சம்பந்தப்பட்ட திட்ட மேலாண்மை கலந்தாலோசக நிறுவனம் பொறுப்பாவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி எம்.பி. ஆய்வு:

சுவா் இடிந்து விழுந்த பகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குள் வருவதால், தடுப்புச் சுவா் இடிந்து விழுந்த இடத்தை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த சுவா் 6 மாதங்களே ஆன நிலையில் மழையில் சேதமடைந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள இந்த சுவா் இடிந்து விழுந்தது குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், பொலிவுறு நகரம் திட்ட அதிகாரிகள் மற்றும் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் ஆகியோா் விபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் வரை இப்பணிகளை தொடரக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com