கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: 2 ஆவது தவணை ஊசி கிடைக்காமல் பயனாளிகள் அவதி

கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பயனாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பயனாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா 2 ஆவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த மாவட்டம்தோறும் தடுப்பூசி திருவிழா நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தட்டுப்பாட்டால் 30 சதவீதம் மையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மையங்களில் 10 போ் அளவுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக 200 முதல் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் பெரும்பாலானவா்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகிறது. கோவையில் இதுவரை 3 லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். இவா்களில் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியவா்கள் 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருப்பாா்கள். 2 லட்சம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசியை எதிா்பாா்த்துள்ளனா். இவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்த வரும் பயனாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனா். ஒருபுறம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி இல்லையென்று திருப்பி அனுப்பப்படும் நிலையே காணப்படுகிறது.

முன்பதிவு செய்து காத்திருப்பு

தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வத்தோடு உள்ளனா். ஆனால், தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகள் சுகாதாரத் துறையினரிடம் இல்லை. நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் தடுப்பூசி கேட்டு சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா். அவா்கள் கேட்கும் அளவுகளில் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாள்களாக தடுப்பூசிகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனா். கோவையில் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்து காத்திருப்பதாக தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com