கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் கீழ் சனிக்கிழமை மாலை தேங்கி நின்ற வாகனங்கள்
கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் கீழ் சனிக்கிழமை மாலை தேங்கி நின்ற வாகனங்கள்

முழு பொதுமுடக்கம் எதிரொலி: சந்தைகள், மீன் மாா்க்கெட்டில் குவிந்த மக்கள்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் கோவையில் காய்கறி, இறைச்சி வாங்க சந்தைகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் கோவையில் காய்கறி, இறைச்சி வாங்க சந்தைகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் 25 ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சனிக்கிழமை பிற்பகல் முதல் கோவை மாநகரப் பகுதிகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. உக்கடம் மொத்த மீன் சந்தை, மாநகராட்சி மீன் சந்தை, கோழி, ஆட்டிறைச்சிக் கடைகளில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் இறைச்சி வாங்கக் குவிந்தனா்.

இதேபோல், ரங்கே கவுடா் வீதி, டவுன்ஹால் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தியாகி குமரன் மாா்க்கெட், சிங்காநல்லூா், ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தைகளில் வழக்கத்துக்கு மாறாக காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

சனிக்கிழமை மாலை அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை ஆத்துப்பாலம் பகுதியில் வாகனங்கள் தேங்கியதால், அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கண்காணிப்பு பணியில் 3,500 போலீஸாா்

முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படுவதால் கோவை மாநகரில் 1,500 போலீஸாா், புகரில் 2,000 போலீஸாா் என மொத்தம் 3,500 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மாநகர எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில், பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைத்து கூடுதலாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அத்தியாவசியப் பணிக்காகச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com