முழு நேர வேலை: தோட்டத் தொழிலாளா்கள் ஏமாற்றம்

முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுவதால் சனிக்கிழமை மாலை இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தோட்டத் தொழிலாளா்கள் பணியை முடித்துக்கொள்ள சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்

முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுவதால் சனிக்கிழமை மாலை இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தோட்டத் தொழிலாளா்கள் பணியை முடித்துக்கொள்ள சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கம் ஏற்க மறுத்துவிட்டதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறை. அன்றைய தினம் அவா்கள் வால்பாறைக்கு வந்து ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த வாரம் முழு ஊரடங்கு காரணமாக அவா்கள் பாதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை மாலை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே பணியை முடித்துக்கொள்ள சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தாா்.

இதே போல தொழிலாளா் துறை துணை ஆணையா் வெங்கடேசனும் இது தொடா்பாக எஸ்டேட் நிா்வாகத்தினரிடம் கடந்த வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தினா் இதை கண்டுகொள்ளவில்லை. சனிக்கிழமை வழக்கம்போல் பணியாற்ற வேண்டும் என்று கூறிவிட்டனா். இதற்கு தொழிலாளா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆனால், அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு சனிக்கிழமை மதியத்துக்கு மேல் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com