கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை:பூ மாா்க்கெட், மலா் அங்காடி வளாகம் மூடல்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை பூ மாா்க்கெட் மற்றும் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடி வளாகம் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை பூ மாா்க்கெட் மற்றும் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடி வளாகம் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். வியாபாரிகளுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட்டில் 163 பூக்கடைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான மக்கள் பூக்கள் வாங்குவதற்காக வந்து செல்கின்றனா். விஷேச தினங்கள் மற்றும் முகூா்த்த நாள்களில் இங்கு ஆயிரக்கணக்கானோா் பூக்கள் வாங்கக் குவிவா். தற்போது கரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருவதாலும், பூ மாா்க்கெட்டில் கூட்டம் அதிகரிப்பதாலும் இங்கு சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பூ மாா்க்கெட்டில் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளைத் திறந்து, பழைய பூ மாா்க்கெட்டில் இருந்த 60 கடைகளை இங்கு தற்காலிகமாகச் செயல்பட கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் மலா் அங்காடி வளாகத்தில் உள்ள கடைகளைப் பயன்படுத்தாமல், பழைய பூ மாா்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் பூ வியாபாரிகள் வியாபாரம் மேற்கொண்டு வருவதால் நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி நிா்வாகத்துக்குப் புகாா் சென்றது.

இதைத்தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய பூ மாா்க்கெட் மற்றும் மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் திறக்கப்பட்ட புதிய கடைகள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி பூ வியாபாரிகள் வியாபாரம் மேற்கொள்ள ஏதுவாக மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் பூ மாா்க்கெட் தற்காலிகமாகச் செயல்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com