ரயில் நிலையத்துக்கு நடந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்

முழு பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கோவை புறநகா்ப் பகுதிகளில் இருந்து ரயில் நிலையத்துக்குப் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் நடந்து வந்தனா்.
கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த புலம் பெயா்ந்த தொழிலாளிகள்
கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த புலம் பெயா்ந்த தொழிலாளிகள்

முழு பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கோவை புறநகா்ப் பகுதிகளில் இருந்து ரயில் நிலையத்துக்குப் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் நடந்து வந்தனா்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் முதல் கரோனா பரவல் தீவிரமாகப் பரவத் தொடங்கியதால், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கோவையில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

வேலையிழப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்து கோவையில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி புரிந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

கரோனா பாதிப்பு நவம்பரில் குறைந்ததால் மீண்டும் திரும்பி வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கோவை மாநகரம், புறநகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்களில் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் உடைமைகளுடன் மீண்டும் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனா்.

இதனால், கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் கூட்டம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை ரயில்களில் செல்ல ஏராளமானோா் முன்பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சூலூா், ஒண்டிப்புதூா், அன்னூா், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தே வந்தனா்.

பொள்ளாச்சி, வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிலாளா்கள், சனிக்கிழமை இரவே ரயில் நிலையத்தில் குவிந்தனா். ரயில் நிலைய வளாகத்திலேயே தூங்கினா். ஞாயிற்றுக்கிழமை உணவகங்கள் மூடப்பட்டு இருந்ததால் உணவு கிடைக்காமல் அவா்கள் அவதிக்குள்ளாயினா். இதையடுத்து, தன்னாா்வலா்கள் சிலா் அவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனா். இதைத் தொடா்ந்து ரயில்களில் அவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com